Thursday, November 25, 2010

தேர்வுக்கு எப்படி தயாராவாது...!

அன்பிற்கினிய தோழர் தோழியரே, வணக்கம் !
தேர்வுக்கு தயாராகறது ஒரு கலைங்க.
ஆனா நெறைய பேரு என்ன செய்வாங்கன்னா, விடிய விடிய படிச்சிட்டு எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிடுவாங்க. அப்புறம் யாராவது எழுப்பிவிடனும். இது அவரோட தப்பில்லைதான், இருந்தாலும் அந்த மாதிரி தவறுகளை என்னோட தோழர், தோழியரான நீங்க செய்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு...!
ஒண்ணுமே இல்லீங்க,
முதல்ல என்ன பண்றீங்கன்னா உங்க ஆசிரியர்கள்கிட்ட, நடந்து முடிந்த தேர்வுகளோட கேள்வித்தாள்கள வாங்குங்க. உங்க நண்பர்கள் ஒரு நாலஞ்சு பேர் ஒரு குழுவா சேர்ந்து, அந்த கேள்வித்தாள்களில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதுங்க. அது ஒரு தேர்வு மாதிரியே நடக்கட்டும். கிட்டத்தட்ட ஒரு மாடல் எக்ஸாம் மாதிரின்னு வேச்சுக்குவோமே. அத நீங்களே உங்களுக்குள்ளேயே ஆள் மாற்றி விடைத்தாள்கள திருத்துங்க. இது உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சியா இருக்கும். இதுல நீங்க நிறைய கத்துக்குவீங்க, எனவெல்லாம் கத்துக்குவீங்கன்னா ஒரு தேர்வ எப்படி எழுத கூடாது, நேரத்த எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம், எந்த மாதிரி கெள்விகள கேட்பாங்க, எவ்ளோ நேரத்துல உங்களால எழுத முடியுது ... இப்படி நிறைய கத்துக்குவீங்க.
அடுத்து ஒப்புவித்தல், இது மிக அற்புதமான முறை. நீங்க உங்க நண்பர்கள்கிட்ட அல்லது ஆசிரியர்கள்கிட்ட ஒப்புவிக்கலாம். இப்படி ஒப்புவிக்கும்போது ஒரு படித்த விசயத்த மீண்டும் நினைவுகூறும்போது என்னமாதிரி தவறுகள நீங்க பண்றீங்கன்னு உங்களுக்கே புறிஞ்சுடும். அத நிவர்த்தி செய்திட்டீங்கன்னா தேர்வு எழுதும்போது நினைவு கூறுதல் விசயத்தில் தடுமாற்றம் வராது.
பொதுவா ஒரே நாளில் எல்லாத்தையும் படிச்சு முடிச்சிரனும்னு நினைக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி செய்வதன் மூலமாதான் நிறைய நேரம் படிக்க முடியும், நிறைய படிக்க முடியும்.
உங்க பாட திட்டம் என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க.
ஒவ்வொரு பாடத்தையும் கவனமா, நிதானமா படியுங்க.
துணை பாடங்களையும் கவனமா படிங்க.
படிக்கும்போது சின்னசின்ன குறிப்புகள் எடுத்து வெச்சுக்கிட்டு படிச்சிங்கன்னா, திருப்பி பார்க்கரறது சுலபம் அதாவது ரிவிஷன் பண்றது.
இந்த குறிப்புகள் தேர்வு எழுதும் முன் திருப்பி பார்க்கறதுக்கு ரொம்ப உதவிகரமா இருக்கும்.
ஒரு பாடத்த எடுத்துக்கிட்டீங்கன்னா, அத முழுசா தெளிவா படிச்சு அதோட அடிப்படைய ஆழமா புரிஞ்சுக்கோங்க. எப்படீன்ன அந்த பாடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விளக்கங்கள், சூத்திரங்கள், சொல்லியல், படங்கள், பாகங்கள், சமன்பாடுகள், தேற்றம், வகைப்பாடு ... இப்படி மிக முக்கியமான செய்திகளை மிக கவனமாக கிரகித்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் படிக்கும் பாடத்துடன் தொடர்புடைய துறை சார்ந்த அறிவை நீங்கள் நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும் . இதற்கு நவீன தொழில்நுட்பம் உதவும்.
மேலும் உங்க துறை சார்ந்த பயிற்சி பட்டறைகள் மற்றும், ஆய்வரங்கங்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

எதை படித்தாலும் எழுதி பார்த்துவிடுவது மிக நல்ல பயிற்சி.
இந்த பயிற்சி உங்களுக்கு எப்படி தேர்வு காலத்தில் உதவும் என்றால், உங்களால் தரவை வேகமாகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதமுடியும். வார்த்தைகளை மிகச்சரியாக கோர்த்து படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும் வாக்கியங்களை எழுத முடியும்.
கேள்விகளுக்கு பதில் எழுத, உங்களுக்கு தேர்வு துணைவன் எனப்படும் கைடுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் உதவும். மேலும் உங்கள் பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளவும் இவைகள் உதவும்.
சில பாடங்கள் மிகவும் சிரமமாக இருப்பது போலவும் புரியாதது போலவும் இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அந்த பாடத்திற்கு நீங்கள் புதுசு அவ்வளவுதான். இப்போ நீங்க ஒரு ஊருக்கு போறீங்க அப்படின்னு வெச்சுக்குவோம். போன உடனே அந்த ஊரின் அத்தனை வழிகளும் உங்களுக்கு பழகிவிடுமா இல்லையே ஆனால் பாருங்க கொஞ்ச நாள் போச்சுன்னா நீங்க மத்தவங்களுக்கு வழி சொல்லுவீங்க. சிறிது நாட்களில் பழகிவிட்டது அவ்ளோதான். அதே மாதிரிதான் கொஞ்ச நாள் கவனம் செலுத்தினா போதும், கஷ்டமான பாடமெல்லாம் உங்களிக்கு தூசி மாதிரி ஆயிடும்.அதுக்கு என்ன பண்ணனும்னா
கஷ்டமான பாடத்த அடிக்கடி திருப்பி பாருங்க
பாடத்திற்கும் பாடத்தில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கும் உள்ள தொடர்பை கவனியுங்க பாடம் புரிந்துவிடும்
தொடர்ந்து படிக்கும் பழக்கம் எப்படி வரும் தெரியுமா, மொதல்ல வாரத்துக்கு ஆறு மணிநேரம் படிங்க சில வார பயிற்சியில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் படிக்ககூடிய அனுபவமும் பயிற்சியும் உங்களுக்கு வந்துவிடும்
சந்தேகம் வந்தா உடனே கேளுங்க தோழர், தோழியரே .....வாழ்த்துக்கள் !
மீண்டும் அடுத்த பதிவில்...!



Tuesday, November 23, 2010

தேர்வை பார்த்து பயப்படாதீங்க...!

அன்பு தோழர், தோழியரே
ஒரு பழமொழி சொல்லுவார்கள், பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று. அது போல நிறைய மாணவர்களுக்கு தேர்வை நினைத்தாலே பயம் பற்றிக்கொள்கிறது.பிறகெங்கே தேர்வை நல்லபடியாக பதற்றமின்றி எழுதுவது.

 அது ஒன்றும் பெரிய கடினமான வேலை இல்லை என்பதுதான் உண்மை.
பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள், சித்திரமும் கைப்பழக்கம்...செந்தமிழும் நாப்பழக்கம் என்று. அது எவ்வளவு பெரிய அனுபவ உண்மை என்பதை இப்பொழுது  நீங்கள் தெரிந்துகொண்டு தேர்வை சிறிதளவும் பயமின்றி எதிர்கொள்ளப்போகிறீர்கள். வெற்றி உங்கள் பக்கம் நிற்கப்போகிறது, வாழ்த்துக்கள்!
என்னங்க பண்றது, சிலபேர பார்த்தீங்கனா நல்லா பேசுவாங்க ஆனா மேடைல பேச சொன்னா  ஐயோ நமக்கு பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங்கு... பேஸ் மட்டமேல்லாம் வீக்குங்கோவ், ஆளவிடுங்க என்று நடுங்கிவிடுவார்கள். இதுக்கு காரணம் பயம் மட்டும்தான்.
நெறய மாணவர்களைப் பார்த்தீங்கன்னா நல்லா படிப்பாங்க ஆனா தேர்வ பார்த்தா மட்டும் பயப்படுவாங்க. இதுக்கு அவங்க தங்கள நம்பாததும், குறைத்து  மதிப்பிட்டுகொள்வதும் மட்டுமே காரணம்.


இதுல இருந்து நீங்க மீள சில வழிமுறைகளை சொல்லித்தருகிறேன், முதலில் நீங்கள் ஒரு திட்டத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். ஒன்னும்மில்லிங்க ஒரு சினிமாவுக்கு போகணும்னா கூட எவ்ளோ பெரிய திட்டம் தீட்டுறோம், தேர்வுக்கு திட்டம் தீட்டினா என்ன தப்பு. சரி என்ன திட்டம்னா ஒரு கால அட்டவணையை தயார் படுத்திக்கோங்க. அதுல எந்த பாடத்திற்கு எவ்ளோ நேரம் படிக்கணும். கஷ்டமான பாடம் எது, அதுக்கு எவ்ளோ நேரம் ஒதுக்கறது அப்படிங்கற அட்டவணை. அதே சமயம் தொடர்ந்து படிக்கணும்னு திட்டம் போடவேண்டாம்.
ஏன்னா மூளை ஒரு குறிப்பிட்ட வேலையை தொடர்ந்து செய்யும்போது எளிதில் களைப்படைந்து, அந்த வேலையின்மீதே சலிப்பை ஏற்படுத்திவிடும்.
அதனால அவ்வப்பொழுது ஒய்வு எடுத்துக்கரமாதிரி அட்டவணையை தயார் செய்யுங்க.
சின்னச்சின்ன பொழுதுபோக்கு விசயங்களில் உங்கள ஈடுபடுத்திக்குங்க. அதாவது சிறிய நடை, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, பெற்றவர்களுக்கு ஏதாவது சிறு உதவி செய்வது, வீட்டை சுத்தம் செய்வது இப்படி ஏதாவது செய்யுங்க. இது உங்களுக்கு ஒரு உடற்பயிற்சியாகவும், மன பயிற்சியாகவும் அமையும்.
அப்புறம் இன்னொரு விஷயம் நீங்க படிக்குற இடம். அது உங்க மனசுக்கு மிகவும் பிடித்த அதே சமயம் அமைதியானதா இருக்கணும். தொலைக்காட்சி, வானொலி, வாகன இரைச்சல். இப்படி உங்களுக்கு மன அமைதி கொடுக்காத விஷயங்கள் இருக்குற இடத்துல படிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
தேவை இல்லாத புத்தகங்கள தூக்கி தூரமா போடுங்க. பொதுவா அதிகாலை நேரத்துல படிக்கிறது நல்லது, ஏன்னா தூங்கி விழித்தவுடன், மூளை ஓய்வேடுத்துட்டதால நல்லா செயல்படும்.
படிக்கிறப்ப எப்பவுமே படுத்துக்கிட்டு படிக்கதீங்க, அப்புறம் தூக்கம்தான் வரும். படுக்கை விரிப்புகள் மீதோ, படுக்கை மீது அமர்ந்தோ ஒருபோதும் படிக்காதீங்க.
உங்க முதுகுத்தண்ட நல்லா செங்குத்தா வெச்சுக்கோங்க, அப்பத்தான் தூக்கம் வராது.
படிக்கும்போது குறிப்புகள் எடுத்து வெச்சுக்கறது ரொம்ப நல்ல பழக்கம்.






 அப்படி குறிப்புகள்
எடுத்து படிச்சா, எப்பவுமே படிச்சது மறக்காது.
படங்கள் மற்றும் பாகங்கள், கணித சூத்திரங்கள், முக்கிய குறிப்புகளை படிக்கும்போதே குறித்து வைத்துக்கொண்டால், பாடங்களை திருப்பி பார்ப்பது சுலபம்.
அப்புறம் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுங்க.

 தேவையான அளவு தண்ணீர் அருந்த மறக்காதீங்க.
ஆறுமணி நேரத்திற்கு குறைவா தூங்க வேண்டாம், அதே சமயம் எட்டு மணி நேரத்திற்கு அதிகமா தூங்கவேண்டாம்.
தேர்வுக்கு போகும்போது தயவு செய்து சாப்ட்டுட்டு போங்க, சாப்பிடாம போனீங்கனா மயக்கம்தான் வரும்.
தேர்வு எழுதும்போது, எழுதும்விதம்தான் உங்களுக்கு மதிப்பெண்ணை பெற்று தரும். முக்கியமான குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட மறந்துடாதீங்க. ஏன்னா விடைத்தாளை திருத்துபவர்கள் உங்களோட முழு விடைத்தாளையும் படிக்கப்போறது இல்லை , நேரம் இருக்காது அதனால முக்கிய குறிப்புகளுக்கு அடிக்கோடிடுவது மிக அவசியம்.
முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள், யோசிச்சு எழுதுறதெல்லாம் கடைசியாக வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுதுதான் குறித்த நேரத்தில் கால விரயமின்றி தேர்வு எழுத  முடியும்.
ஒரு முக்கியமான விஷயம், சில நேரங்களில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு, அதை சும்மாவாச்சும் எழுதி வையுங்கள். அந்த மாதிரியான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். இது எப்பொழுதாவது கவனக்குறைவாக ஏற்படும் தவறு.
தவறான வழிமுறைகளை எப்பொழுதும் கடைபிடிக்காதீர்கள்.
தேர்வு எழுதிய பின்பு அதைப்பற்றி பேசிக்கொண்டோ கவலைப்பட்டுக்கொண்டோ  இல்லாமல் அடுத்த தேர்வுக்கு தயாராவது சிறந்தது.

 அடுத்த பதிவில் தொடர்கிறேன் ...

கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு...!

நமது நாட்டில் கல்வி சேவை அளித்து வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நன்றிகள்!




ஒரு நாட்டின் மனித வளத்தை மேம்படுத்தும் மிக முக்கியமான செயலில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களின் பணி மிகவும் மகத்தானது. எவ்வளவு மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் .... சொல்லிக்கொண்டே போகலாம்.
இருப்பினும், இங்கே ஆசிரியர்களின் திறன் குறித்த ஆழ்ந்த பார்வை மிக அவசியமாகிறது. ஏனென்றால் மாணவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் அவர்கள்தான். இங்கே ஆசிரியர்களின் ஆளுமை மாணவர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது, பழக்க வழக்கங்கள் மாணவர்களால் தொடரப்படுகிறது. ஆகவே இங்கே ஆசிரியர்களின் உளவியல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களுக்கு அவசியமாகிறது.
கல்வி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சில குறிப்புகள்,




ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரியம் ஆசிரியர், மனிதவளத்தை  மேம்படுத்தும்  வகையில் செயல் திட்டங்களை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்தவராக  இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களின் அறிவு வளத்தையும், செயல் திறனையும் அவரால் இனம் காண முடியும். 




முதலில் ஒரு ஆசிரியர் தனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்தாராயும் மனப்பக்குவம் நிறைந்தவராக  இருக்கவேண்டும், அப்பொழுதுதான் மாணவர்களின் சூழ்நிலையை ஆராய்ந்து உணர முடியும்.
அதேபோல் உங்களது ஆசிரியர்களின்  திறமையையும் நீங்கள் மதிக்க தவறுதல் கூடாது.


எப்பொழுதும் உங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு, பலவிதமான கட்டுத் திட்டங்களை விதிக்காதீர்கள்.




இப்பொழுது பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படுகிறது, இருப்பினும் அந்த கல்வி நிறுவனத்திற்கென்று ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் என்பதுதான் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும்  சமூக ஆர்வலர்களின் விருப்பமும் கவலையும். ஆகவே உங்களுக்கென்று ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவது, விவசாயத்தை பெருக்குவது, மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது




பொருளாதார நிபுணர்களை உருவாக்குவது, அரசியல் அறிஞர்களை உருவாக்குவது இப்படி ஏதாவது புரட்சிகரமான ஒரு குறிக்கோள். நமது நாட்டையும்,  பொருளாதாரத்தையும், விவசாயத்தையும், அறிவையும், வளத்தையும் பெருக்கும் குறிக்கோள்.
நம்ம நாடே உங்கள நம்பித்தான் இருக்கு !
பொதுவாக ஆசிரியர்கள், தங்களது கல்வி நிறுவனத்தில் இருக்கும் உயர் பதவி வகிப்பவர்கள் அதாவது முதல்வர், தாளாளர், தலைவர், நிறுவனர் ஆகியோர் தங்களிடம் கலந்து ஆலோசனை செய்வதை  விரும்புகிறார்கள்.அவ்வாறு
ஆலோசித்துசெயல்படுத்தும்திட்டங்களை முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்ற தயாராக இருக்கிறார்கள் என்பதே உண்மை.


ஆலோசனை முக்கியம் !
ஆகவே பணிகளை எப்படி செய்யவேண்டும் என்று கட்டளையிடாமல் அவர்களிடமே ஆலோசிப்பது சிறந்த பலனைத்தரும். இதை அவர்கள் தங்களது மாணவர்களிடம் செயல்படுத்துவார்கள், அதுவும் நல்ல பலனைத்தரும். ஏனென்றால் கட்டளையிடும் ஆசிரியர்களை மாணவர்கள் ஒருபோதும் விரும்புவது இல்லை என்பது எங்களது ஆய்வில் கிடைத்த ஆதாரம்.






கட்டளை வேண்டாமே !
உங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களின் தனித்தன்மையை நீங்கள் குறித்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
ஒரு ஆசிரியரிடம் ஒரு பொறுப்பை கொடுத்து, அவர் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்களது எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தனது முழுத்திறமையயும் அவர் வெளிப்படுத்துவார்.


யாருக்கு எந்த வேலையில் விருப்பமும் ஈடுபாடும் உள்ளதோ அந்த வேலையை அவர்களிடம் ஒப்படைப்பதுதான் சிறந்தது.


ஒரு ஆசிரியரால் கல்வி நிறுவனத்திற்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தாவு தாட்சண்யம் பார்க்காமல் அவரை பணியிலிருந்து நீக்கிவிடுங்கள். ஒரு கணம் தாமதித்தாலும் மிகப்பெரிய இழுக்கை நீங்கள் சந்திக்க வேண்டிவரும் .


உங்களது பணியாளர்களிடம் மட்டமான பேச்சையோ, வார்த்தை ஜாலங்களையோ வெளிப்படுத்ததீர்கள் அது ஏற்புடையதல்ல.
உங்களது பணியாளர்களிடம் வெறும் லாப நட்ட கணக்கை மட்டும் காட்டுவதை தவிர்த்துவிட்டு, உங்களது கல்வி நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோளை தெரியப்படுத்துங்கள்.


பழைய கல்வி முறைகளை மட்டுமே கடை பிடிக்காதீர்கள்
புதுசாதான் யோசிப்போமே !


 மாறாக நவீன யுத்திகளை கையாளுங்கள்.


உங்களது பணியாளர்கள் திறமையானவர்களாக இருந்தால், பணி தொடர்பான அறிக்கைகளை தாமாகவே முன்வந்து சமர்ப்பிப்பார்கள்.
சில பணியாளர்கள் தங்களது விருப்பம்போல் நடந்துகொள்வார்கள், அவர்களை கவனிக்க தவறாதீர்கள். பெரும்பாலும் அவர்களது அணுகுமுறை தவறானதாக இருக்கக்கூடும்.
மாணவர்களின் புகார்களை எப்பொழுதும் அலட்சியப்படுத்தாதீர்கள், ஆராயுங்கள்.
உங்களது பணியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காதீர்கள், அவர்களின் பலவீனம் மட்டுமே வெளிப்பட அது ஏதுவாகிவிடும்.


நீங்கள் பொறுப்பானவராக இருந்தால் உங்களது பணியாளர்களும், மாணவர்களும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் நீங்கள்தானே  அவர்களுக்கு முன்மாதிரி.


          உங்களது கல்வி நிறுவனம் வளர வாழ்த்துக்கள்! 



Sunday, November 21, 2010

மாணவர்களுக்கான பகுதி...!

அன்பு தோழர், தோழியரே
வணக்கம் !
இது உங்கள் பகுதி . உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்க காத்திருக்கிறோம். கேளுங்கள் பதிலளிக்கிறோம் !

இன்று உங்களுக்கு, உங்களது தோற்றத்தை வளப்படுத்திக்கொள்வது  பற்றி கற்றுத்தரப் போகிறேன்.
தோற்றம் ஒரு மனிதனை பற்றி மற்றொரு மனிதனுக்கு உணர்த்தக்கூடிய பண்பை பெற்றது.
இவன் மோசமானவன், நல்லவன், கோமாளி, பயந்தான்கொள்ளி, வீரன், அப்பாவி, திருடன், இப்படி ஒருவன் தோற்றத்தை கொண்டுதான் மற்றவர்கள் அவனை கணிக்கிறார்கள்.
ஆகவே உங்களது தோற்றத்தை பளிச்னு வெச்சுக்க சில யோசனைகள் !

முதலில் நீங்கள் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும், அனால் அதில் ஒரு விறைப்புதன்மைய காட்டாதீங்க. நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வைன்னு நம்ம பாரதியார் சொல்லியிருக்கார் இல்லையா, அதுமாதிரி.

உடலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துங்கள். சிரமப்பட்டு உய்ர்த்தாதீங்க. நீங்க அப்படி உஅர்த்தும்போது உங்க உடல் எடைய உணரக்கூடாது, அதுமாதிரி அப்படி லேசா உயர்த்தணும்.

நடக்கும்போது சிரமப்படாமல் அடிகளை நிதானமாக வைத்து நடக்கணும்.

அப்படி நீங்க நடக்கும்போது, உங்க நிதான நடை, உங்களது தன்னம்பிக்கைய வெளிப்படுத்துற மாதிரி இருக்கணுமே தவிர தலைக்கணத்த வெளிப்படுத்துற மாதிரி இருக்கக்கூடது.புன்முறுவலையும் செர்த்துக்கிட்டீங்கன்னா உங்க தோற்றம் மேலும் வசீகரமாகிவிடும்.

எப்பவும் சுத்தமான உடைகளை மட்டும் அணியுங்கள். உடைகள் ரொம்ப முக்கியம். அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம்.

ஒருமுறை பயன்படுத்திய உடைகளை, துவைத்த பின்னர் தான் மறுபடியும் பயன்படுத்தவேண்டும்.

தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். ஏன் என்றால் நமது நாடு வெப்ப நாடு. நெறைய வியர்க்கும். அதனால்தான் பெரியவர்கள் " கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி " அப்படின்னு சொல்லியிருக்காங்க.

அப்புறம் நாகரிகம் அப்படிங்கற பேர்ல கண்டபடி முடிய வளர்த்துக்காதீங்க. நீங்க நல்ல மாணவரா இருந்தாலும் உங்க மேல தப்பான அபிப்பிராயம் வந்துவிடும்.

இப்படித்தான் சமர்த்தா இருக்கணும் 
விரல் நகங்களை வாரம் ஒரு முறை சீர் செய்துவிடுங்க.
காலணிகள சுத்தமா பளிச்னு வெச்சுக்கணும்.










 இப்படி எல்லாம் சுத்தமா இருந்தாதான் உங்க தோற்றமும் நீங்களும் பளிச்னு இருப்பீங்க. 






பெற்றோர்களுக்கான பகுதி...!

வணக்கம் பெற்றோர்களே,
தங்களது வருகைக்கு நன்றி. இங்கே உங்களது குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் . உங்கள் குழந்தைகளின் ஆளுமை, படிப்பு, நினைவுத்திறன், இதர துறைகள் சார்ந்த ஈடுபாடு பற்றி நீங்கள் கேட்கலாம்.
மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உள்ள நல்லுறவை மேம்படுத்திக்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.
உங்களது கேள்விகளுக்காக காத்திருக்கிறோம்...!
இங்கே உங்களது குழந்தைகளின் உளவியல் மற்றும் பழக்க வழக்கங்களை உங்களால் புரிந்துகொள்ளமுடியும்.





பல்வேறு மாணவர்களுக்கு அளிக்கப்பட பயிற்சியின் வாயிலாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, November 19, 2010

ஆசிரியர்களுக்கான பகுதி...!

வணக்கம் ஆசிரியர்களே !
உங்களது மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இந்த தளத்திற்கு வருகை புரிந்ததற்கு நன்றி !
இவ்வளவு தூரம் சிரமம் எடுத்துக்கொள்ளும்போதே நீங்கள் எப்படிப்பட்ட பெருந்தகையாளர் என்பது விளங்குகிறது. உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இந்த பகுதியில் ஆசிரியர்களுக்கு தேவையான குறிப்புகள் வழங்கப்படும். மாணவர்களின் உளவியல் பற்றியும், ஆசிரியர்களின் உளவியல் பற்றியும் ஆராயப்படும். 

" எழுத்தறிவித்தவன் இறைவன் "
ஆம் நீங்கள் இறைவனுக்கு ஒப்பாக போற்றப்படுபவர்கள். அதனால்தான் " மாதா, பிதா, குரு, தெய்வம் " என்று தெய்வத்திற்கு முன்னால் வைக்கப்பட்டு போற்றப்படுகிறீர்கள். மாதாவாகவும், பிதாவாகவும் இருக்கும் குரு, நமது தெய்வம் என்ற பொருள்படும் படியான இந்த வாக்கியம் உங்களைப் போன்ற நல்லாசிரியர்களால்தான் பிரகாசிக்கப்போகிறது.
உங்களைப்போன்ற பொறுப்பான ஆசிரியர்கள்தான் நல்ல சமூகத்தையும், பண்பாட்டையும் உருவாக்க முடியும். அதுவும் நம்மை போன்ற மனிதவளம் நிறைந்த நாட்டில் உங்களது பங்கு மிக அதிகம். ஒரு நாட்டின் கலாச்சாரமும், நாகரிகமும் அந்த நாட்டின் ஆசிரியர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
 இது மிகவும் உண்மை. ஏனென்றால் ஒரு மாணவன் தனது வாழ் நாளின் முக்கிய வளர்ச்சிப் பருவத்தின் பெரும் பகுதியை ஆசிரியர்களுடன் தான் செலவிடுகிறான். ஏனென்றால் பள்ளியிலும், கல்லூரியிலும் நீங்கள்தான் பெற்றோர்.



ஒரு அறிவியல் அறி ஞன், நல்ல அரசியல் தலைவன், கலை ஞன், இப்படி ஒரு நாட்டின் முதுகெலும்பான அத்தனை துறை வல்லுனர்களும் உங்களால் தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். உங்களது மாணவர்களின் முன் மாதிரி நீங்கள்தான். ஆகவே தெய்வங்களே, நமது நாட்டின் எதிர் கால தூண்களை வலுப்படுத்த எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

பொன்மொழிகள்...!

அன்பு தோழர், தோழியர்களுக்கு வணக்கம் !
இது பொன்மொழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி. இந்த பொன்மொழிகள் உங்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், உங்களது சிந்தனையை தூண்டுவதாகவும் அமையும். படித்து பயன்பெருங்கள் !

எப்பவுமே பாத்தீங்கன்னா நம்மாளுங்க பல விசயங்கள போட்டு மண்டைய ஒடச்சுக்குவாங்க, தேவை இல்லாம குழப்பிக்குவாங்க. எதிர்காலத்தப்பத்தி ரொம்ப பயப்படுவாங்க. இப்படி பண்றதால மனக்குழப்பம்தான் மிஞ்சும்.
 அதுக்குத்தான் வில்லியம் ஆஸ்லர் சொல்றாரு
" உங்கள் வாழ்க்கையை தனித்தனி நாட்களாக பிரித்துக்கொள்ளுங்கள். நேற்றைய நாட்களை முற்றிலும் மூடிவிடுங்கள், நாளைய தினங்களின் கதவுகளையும் சாத்திவிடுங்கள். இன்று ஒரு நாள் மட்டும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிக்கொள்ளவேண்டியது இன்று ஒரு நாள் பிரச்சினை மட்டுமே. இது மிகவும் எளிது " அப்படின்னு.
நீங்களும் எழுதின தேர்வைப்பத்தியும், எழுதப்போற தேர்வைப்பத்தியும் கவலப்படறத விட்டுட்டு, இன்று என்னப் படிக்கப்போகிறோம் அப்படின்னு யோசிச்சா கண்டிப்பா வெற்றி உங்களுக்குத்தான்.

இன்னும் சில பேர் என்ன பன்னுவாங்கன்னா
விளையாட்டோ, படிப்போ இதுல தோல்வியடஞ்சுட்டா ரொம்பவே கலங்கிடுவாங்க.கலங்கிட்டா மட்டும் எல்லாம் சரியாயிடுமா என்ன
" எந்த ஒரு துரதிர்ஷ்டத்தின் விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல் படி, நிகழ்ந்துவிட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் " அப்படின்னு வில்லியம் ஜேம்ஸ் சொல்றாருங்க.


 வில்லியம் ஜேம்ஸ் 




 அதனால மன உறுதிய வளர்த்துக்கோங்க, அப்பத்தான் மனப்பக்குவம் வளரும்.

உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது, அதப் பார்த்து பயப்படாம கொஞ்சம் பல்ல கடிச்சிக்கிட்டு பொறுத்துக்குங்க, கண்டிப்பா அந்த பிரச்சினைல இருந்து விடுபட்டு விடுவீர்கள்.
" இருண்ட தினத்தை மறு நாள்வரை வாழ்ந்துவிட்டால், அந்த நாள் 
தானாகவே கழிந்துவிடும் " 
இத வில்லியம் கூப்பர் என்ற ஞானி கூறியிருக்காருங்க.

நார்மன் வின்சன்ட் பீல் என்ன சொல்றாரு தெரியுமா
" வெற்றியை சிந்தியுங்கள், வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்,வெற்றியை உருவாக்குவதற்கு தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும் " அப்படின்னு.




நார்மன் வின்சன்ட் பீல்
 டாக்டர். அப்துல் கலாம் 

நம்ம முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்கூட இதத்தாங்க கனவு காணுங்க அப்படின்னு சொன்னாரு.

சரி கனவு காண்பதோட நிற்காம கொஞ்சம் உழைக்கவும் செய்யவேண்டும். அதுக்கு முன்னாடி சில பேர்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம்.
ஆண்ட்ரூ கார்னகி இவரு பெரிய எஃகு தொழிலதிபர்


ஆண்ட்ரூ கார்னகி
 இவரோட ஆரம்ப கால சம்பளம் எவ்வளவு தெரியுமா வெறும் நான்கு டாலர்தான்.
 ராக் ஃபெல்லர் இவர் பெரிய கோடீஸ்வரர், அப்படி ஆகறதுக்கு முன்னாடி வாரத்திற்கு ஆறு டாலர்தான் சம்பளம் வாங்கினார். இன்று நீங்கள் ஃபோர்டு நிறுவன கார்களை பார்க்கிறீர்கள். சர்வதேச பிரபல நிறுவனம்.


 ஹென்றி ஃபோர்ட்
 இதன் உரிமையாளர் ஹென்றி ஃபோர்ட் வாரத்திற்கு இரண்டரை டாலர் சம்பளத்தில் வேலைக்கு இருந்தவர் என்றால் யாராவது நம்புவீர்களா, ஆனால் அதுதான் உண்மை. பின்பு இவர்கள் எல்லாம் எப்படி இவ்வாறு உலகப்புகழ் அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் கூறிய ஒரே விசயம் என்ன தெரியுமா
" வாழ்க்கையில் வெற்றிபெற ஒரே வழி கடின உழைப்பு மட்டுமே "
அதனாலதான் " காரியத்த செய்யுங்கள் சக்தி தானே வரும் " அப்படின்னு எமர்ஸன் கூறியிருக்கார்.

அதனால கடினமா உழைக்க எப்பவுமே தயாரா இருங்க !

Thursday, November 18, 2010

இனி உங்களது ஆளுமை உங்களது கைகளில்...!

இப்படிதான் நீங்க கண்டுப்பிடிக்கப்போறீங்க 
அன்பு தோழர் தோழியரே, வணக்கம்!
நாம் அனைவருமே இயற்கையின்  முன் மாணவர்கள்தான். ஆகவே வயது வித்தியாசம் பார்க்காமல் நாம் இந்த தளத்தில் நிறைய கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தப்போகிறோம் சரியா.
நீங்கள் பள்ளி மாணவராக இருந்தாலும் கல்லூரி மாணவராக இருந்தாலும் உங்களுக்குள் ஒரு ஆராய்ச்சியாளர்  எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதை  நானறிவேன் .
உங்களது கண்டுபிடிப்பு எதுவாக இருந்தாலும் சரி அதை இந்த உலகிற்கு அறிவிப்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம் . உங்களது கண்டுபிடிப்புகளை எப்பொழுதும்  தயாராக வைத்திருங்கள், விருப்பமிருந்தால் இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம் , உங்களது படங்களுடன்.  


ஆசிரியர்களையும் உங்க அணியில சேர்த்துக்குங்க 

நீங்கள் நன்றாக படிக்கவும், நல்லஅணுகுமுறையை  கற்றுக்கொள்ளவும், உங்களது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளவும் இந்த தளத்தில் எப்பொழுது  வேண்டுமானாலும் சந்தேகங்களை கேட்கலாம் எனது இனிய நண்பர்களே.
இனி உங்களது ஆளுமை உங்களது கைகளில்...!

புதியதோர் உலகம் செய்வோம்...!

மாணவர்கள், ஒரு நாட்டின் சிறந்த மனிதவளம் . இவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் , பொறியாளர்களாகவும், சட்டத்தை இயற்றுபவர்களாகவும், பாதுகாப்பவர்களாகவும், தலைசிறந்த பொருளாதார வல்லுனர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், தொழிலதிபர்களாகவும், கலைஞர்களாகவும், ராணுவ வீரர்களாகவும் தங்களை நாட்டுக்காக அர்ப்பணித்துகொள்பவர்கள் . அப்படிப்பட்ட மாணவச்செல்வங்களை நாம் சிறந்தவர்களாக உருவாக்குவது நமது கடமை.
                                 ஜெய்ஹிந்த்...!